News

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தமிழருக்கு சாதகமான விடயங்கள்! – விக்னேஸ்வரன்

 

 

தமிழ் மக்களின் பல வருட கால போராட்டத்தின் காரணமாகவே தமிழர்களின் விடயங்கள் சர்வதேசத்திற்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இலங்கை தொடர்பான பல சாதகமான விடயங்களை ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரையில் உள்ளடக்கியுள்ளது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான செயற்பாடுகளில் மக்கள் முழுமையான அளவில் பங்குபற்றி எம்மை பலப்படுத்துவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

 

 

தமிழ் மக்களின் போராட்ட காலங்களில் கிளிநொச்சி மாவட்டம் பல வகிபாகங்களை வகித்திருக்கின்றது.யுத்த காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் யாழ். குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்த போது, கிளிநொச்சியில் தான் அடைக்கலம் புகுந்தார்கள்.இந்த மக்களுக்கான உணவு, உறையுள் என்பவற்றை வழங்கி அவர்கள் பாதுகாத்து அடைக்கலம் புகுந்த மக்களை அரவணைத்து வேண்டிய உதவிகள் அனைத்தையும் வழங்கி கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது சகோதரத்துவத்தை காண்பித்திருக்கின்றார்கள்.

அதேபோல கிளிநொச்சி மாவட்ட மக்கள் எமது உரிமைக்கான போராட்டத்தில் பல்வேறு வகையிலும் மகத்தான பங்களிப்பை இதுவரை வழங்கி வந்துள்ளார்கள். பல தியாகங்களை செய்திருக்கின்றார்கள், அரசியல் ரீதியான பங்குபற்றலும், விழிப்புணர்வும் இந்த மக்களிடம் அதிகம் என்று கூறினால் மிகையாகாது.

 

 

எமது உரிமையை மீட்டெடுப்பதற்காக பல சகாப்த காலம் நாங்கள் போராடி வருகிறோம். ஆயுத போராட்டம் மெளனிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு பெறுகின்றன.இந்த நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டாலும், இன படுகொலைக்கான நீதி போர்க்குற்றவிசாரணை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தினரின் பயனிலுள்ள காணிகள் விடுவிப்பு போன்ற பல்வேறு விடயங்களில் ஆட்சி அதிகாரங்களுக்கு வருகின்ற அரசாங்கங்களின் தொடர்ச்சியான ஏமாற்று நாடகங்களும், அரச எதிர்ப்பில்லாத தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடும், தமிழ் மக்களாகிய எமது மனதில் ஆறாத காயத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

இன விடுதலையை முதன்மைப்படுத்தி நீதியின் வழி நின்று செயலாற்ற தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை நிறுவ வேண்டிய காலத்தின் கட்டாயம் ஆயிற்று.

 

 

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான உள்ள விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளிளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டுமென்று ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டதுடன், கட்சிக்கான கீதம் வெளியிடப்பட்டு, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top