News

சுமந்திரனின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாத ரணில்! ஜெனிவா விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்

 

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் இவ் எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

இதன் போது பேசிய சுமந்திரன், இலங்கையின் நீதிச் செயல்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் உரையாற்றியமை ஏமாற்றம் அளிக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொள்ள இணங்கி, 3 தீர்மானங்களிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதை இலங்கை அரசியலமைப்பு தடை செய்யவில்லை.

நாட்டின் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, 2015இல் நீதி அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ச, இணங்கியிருந்தார். அவரது இணக்கத்தின் அடிப்படையில் தான், 30/1 தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது.

2013ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதியரசருக்கு எதிரான குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த விஜேதாச ராஜபக்ச, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் இணைத்துக் கொள்ள கோரும் தனிநபர் பிரேரரணையை சமர்ப்பித்திருந்தார்.

தமிழ் மக்கள் முற்றிலும் வெளிநாட்டு நீதிப் பொறிமுறையைத் தான் கேட்கிறார்கள். இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் அனைத்துலக வாக்குறுதியை தொடர்ந்தும் மீறினால், இலங்கை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை அல்லது ஏனைய வெளிநாட்டு நீதிப் பொறிமுறையை நாடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆனால், கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள பிரதமர் ரணில், ‘தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் கொள்கைவழியில்தான் நாம் பயணிக்கின்றோம் என்பது நேற்று கூட உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஜெனீவா தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இலங்கை ஜனநாயக நாடு. சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பு இருக்கின்றது என சுட்டிக்காட்டி மேற்படி கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்தார்.  அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகமொன்றை இலங்கையில் அமைக்கவேண்டியதில்லை.

மனித உரிமை ஆணையாளர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் எமது நாட்டுக்கு வரலாம் என்றும் எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை, படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல இடமளிக்கப்படாது. எவராவது தவறிழைத்திருக்கும் பட்சத்தில் உள்நாட்டில் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். எமது அரசு படையினரை தண்டிக்கவில்லை. மாறாக ஐ.நா. அமைதிப்படைக்கே ஆட்களை அனுப்பியுள்ளோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தபோதும், பிரதமர் பதவியைப் பறித்த போதும், வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பானது, எந்தவித நிபந்தனையும் இன்றி தங்களது ஆதரவைக் கொடுத்து பிரதமரையும் அவரின் அரசையும் காப்பாற்றினார்கள்.

ஆனால், இன்று சர்வதேச நீதிபதிகள் வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சர் சொன்னதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கடுமையாக கண்டித்ததோடு, சர்வதேச நீதிபதிகள் கொண்ட கலப்பு விசாரணை அவசியம். மாறாக அது இல்லை என்றால் தமிழர்கள் மாற்றுவழியில் சிந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரித்தும் பிரதமரின் இப்பேச்சு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதமர் அவமதித்துச் செயற்படுகின்றாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக, பிரதமரின் இன்றைய பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் காப்பாற்றப்பட்டது என்று மகிந்த தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான கூட்டமைப்பின் எச்சரிக்கையை ரணில் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top