News

மனித புதைகுழி – அறிக்கைகளை பெற்றுக்கொள்ள நினைவூட்டல் கடிதங்களை அனுப்ப தீர்மானம்

 மன்னார் மனித புதைகுழியின் மனித எச்சங்கள் தொடர்பான கார்பன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் மேலும் பல கிடைக்கப்பெறவுள்ளதால், அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக, கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன்  தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறித்த அறிக்கையானது இடைக்கால அறிக்கை என்பதால் இதனைக்கொண்டு முடிவெடுக்க முடியாது.

எனவே மேலும் பல அறிக்கைகள் வரவிருப்பதால் அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அதனை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேராசிரியர் ராஜ் சோமதேவன் மற்றும் இந்த விடயம் தொடர்பாக ஆய்வு செய்யும் வைத்தியர்களின் அறிக்கை போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வனைத்து அறிக்கைகளையும் முழுமையாகக்கொண்டு ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட ஆணையாளர்கள், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, போராசிரியர் ராஜ் சோமதேவ, காணாமலாக்கப்பட்ட உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள், காணாமலாக்கப்பட்ட உறவினர்களைத்தேடும் சங்க பிரதிநிதிகள், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் மன்னார் மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்ற இக்கூட்டத்தின் இறுதியாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதாக கூறப்பட்ட போதும், அவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வாகனத்தில் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top