News

மன்னார் புதைகுழி எச்ச கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு கிடைத்தது!

 

மன்னார் – மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அதிகாரபூர்வ கார்பன் பரிசோதனை அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்துக்கு சட்டபூர்வமாக கிடைத்துள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனிதஎச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த அறிக்கை இன்று சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு கிடைத்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மனித புதை குழியின் அகழ்வு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக நீதிவான், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top