News

யுத்தமில்லாத நாட்டில் பாதுகாப்பு செலவீன அதிகரிப்பு எதற்கு? – கூட்டமைப்பு

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது அபிவிருத்திக்கானதல்ல என்றும், இதனை ஒரு யுத்த வரவு செலவு திட்டமாகவே தாம் நோக்குவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, யுத்தம் இல்லாத நாட்டில் பாதுகாப்பு செலவீனத்திற்கு எதற்காக அதிகளவு தொகையை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது. இவ்விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய வரவு செலவு திட்டத்தில் ஆறில் ஒரு பங்கு என்ற பெருந்தொகை பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சமாதானம் நிலவுகின்ற நிலையில் ஏன் இவ்வளவு தொகை பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரும் தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு இந்த வரவு செலவு திட்டத்தினூடாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அவ்வாறான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். வெறும் அபிவிருத்திக்கான வரவு செலவு திட்டம் என கூறுவதன் மூலம் மாத்திரம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்றும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top