News

எத்தியோப்பிய விமான விபத்திற்கான காரணம்தான் என்ன? அடுக்கடுக்காக காரணங்களை அடுக்கும் நிபுணர்

 

157 பேரை பலிகொண்ட விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தும், விபத்திற்கான காரணம் இன்னதென்று தகவல் வெளிவராத நிலையில், விமானவியல் மற்றும் விமான பாதுகாப்பியல் நிபுணர் ஒருவர் எதனால் அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்பதற்கான காரணங்களை வரிசையாக அடுக்குகிறார்.

Julian Bray என்பவர் ஒரு விமானவியல் மற்றும் விமான பாதுகாப்பியல் நிபுணர். புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த போயிங் விமானம் ஏன் விழுந்து நொறுங்கியது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில் விசாரணை தொடர்கிறது.

அந்த விமானத்தில் பல்வேறு கணினி மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்று கூறும் Julian, அதே நேரத்தில் அந்த Max 8 வகை விமானத்தை இயக்குவதற்கான போதுமான பயிற்சியை அந்த விமானத்தை இயக்கிய விமானிகள் பெற்றிருக்காமலும் இருந்திருக்கலாம் என்னும் அதிர்ச்சிக்குரிய தகவலையும் அளிக்கிறார்.

 

 

ஞாயிறன்று விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானம் புதிய போயிங் 737-800 Max ரக விமானங்களின் பாதுகாப்புக்குறைபாடுகள் குறித்த பல ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறது. எப்படி எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்களோ, அதேபோல் சென்ற அக்டோபர் மாதம் நிகழ்ந்த இந்தோனேஷிய விமான விபத்திலும் 189 பேர் உயிரிழந்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இரண்டுமே போயிங் Max 8 ரக விமானங்கள்.

இரண்டு விமான விபத்துக்களிலும் உள்ள மனதை வலிக்கச் செய்யும் உண்மை, இரண்டு விமானங்களுமே ஒரே கட்டத்தில்தான் விபத்துக்குள்ளாகியுள்ளன, புறப்பட்ட சில நிமிடங்களில்… இரண்டு சம்பவங்களிலுமே வானிலை சாதகமாக இருந்துள்ளது, அதேபோல் இரு விமானிகளுமே தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள், இருவருக்குமே அது நடக்கவில்லை.

Lion Air Max 8ஐப்போலவே, ET302ம் திடீரென வேகமாக கீழ் நோக்கி விரையும்போது, அதன் இரண்டு எஞ்சின்களுமே முழு வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்திருக்கின்றன.  எனவே தான் உலகம் முழுவதும் உள்ள பொறுப்பிலிருப்போர் போயிங் விமானங்களைக் கைவிட முடிவு செய்துள்ளது சரியான முடிவு என நான் நம்புகிறேன் என்கிறார் Julian Bray.

 

 

இந்த புதிய போயிங் விமானத்தில் கணினியால் கட்டுப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் ஒன்று இருக்கிறது, அதுவே பிரச்சினையாகவும் இருந்திருக்கக்கூடும். போயிங் விமானங்களில் கணினியால் விமானத்தை கட்டுப்படுத்தும் fly-by-wire என்ற நவீன தொழில்நுட்பம் இருக்கிறது.

Max 8இல் அது இன்னும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் எரிபொருளை 30 சதவிகிதம் மிச்சப்படுத்தும் நோக்கில் இரண்டு பிரமாண்ட எஞ்சின்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அந்த எஞ்சின்கள் மிகப்பெரியவையாக இருப்பதால் அவற்றை விமானத்தின் இறக்கைக்கு கீழே பொருத்தமுடியாது.

எனவே அவை இறக்கைக்கு கீழில்லாமல், விமானத்தின் உடல் பகுதியுடனேயே, அதுவும் சற்று முன் தள்ளியவாறு பொருத்தப்பட்டுள்ளன. இதனால் விமானத்தின் புவியீர்ப்பு மையம் (centre of gravity) பெரிய அளவில் மாறுகிறது. விமான பொறியியலின்படி இத்தகைய அமைப்பு கொண்ட ஒரு விமானத்தால் பறக்கவே முடியாது.

 

 

ஆனால் போயிங் நிறுவனத்தை பொருத்தவரை, அது இந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு தன்னிடம் ஒரு ரகசிய ஆயுதம் இருப்பதாக கருதியது. அது… fly-by-wire கருவி.  அதாவது எல்லா பிரச்சினைகளையும் கணினி பார்த்துக் கொள்ளும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், விமானம் பறக்கும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், கணினியின் கட்டுப்பாட்டிலிருக்கும் விமானத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஒரு மாபெரும் அழிவைத் தவிர்ப்பதற்கு, விமானிக்கு வெறும் சில நிமிடங்களே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், Max 8இல் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களை குறித்து விமானிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி போதுமான அளவில் இல்லை. ஒரு விமானி, தான் விமானத்தை இயக்குவதற்கு வெறும் 90 நிமிடங்கள் இருக்கும்போது, அதை இயக்குவது குறித்த வழிமுறைகள் தனக்கு ஐபாட் வழியாக கொடுக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்துள்ளார்.

 

 

தற்போது இவ்வித பயிற்சி பற்றாக்குறை விமான துறையில் சகஜமான ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம், விமான பயிற்சிக்கான செலவுகளை விமானத்துறை ஏற்றுக்கொள்ளும். இப்போது விமானிகளே இந்த செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, இதனால் அந்த விமானிகள் அந்த பயிற்சியை ஒழுங்கான முறையில் முழுமையாக மேற்கொள்ளாவிட்டால், பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எத்தியோப்பிய விமான விபத்து இந்த உண்மைகளையெல்லாம் மீண்டும் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. போதுமான பயிற்சியும் அளிக்காமல், குறைபாடுகளை மறைத்து விமானத்தை விற்பதற்காக செய்யப்பட்ட மார்க்கெட்டிங் கொடுத்த அழுத்தங்களும், பணத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளும், ஏராளமான உயிர்களை பலி வாங்கியுள்ளதோடு, தன் வினை தன்னைச் சுடும் என்பது போல, போயிங்கின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுத்தி பெரும்பாலான நாடுகள் போயிங் பயன்பாட்டையே கைவிடும் அளவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்கிறார் Julian Bray.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top