India

 இறுதிக்கட்ட பிரசாரத்தில் பயங்கரம் சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல் எம்எல்ஏ உள்பட 5 பேர் பலி: காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சுட்டுக்கொலை

 சட்டீஸ்கரில் பிரசார வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் பாஜ எம்எல்ஏ உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தண்டேவாடா தொகுதி பாஜ எம்எல்ஏ பீமா மாண்டவி நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பாஸ்தார் பகுதியில் உள்ள பசேலியில் இருந்து குவகோன்டாவை நோக்கி அவரது பிரசார வாகனம் சென்றது. சியாமகிரி மலைப்பகுதியில் சென்றபோது அங்கு தரையில் புதைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன.

அதில், பீமா சென்ற வாகனம் சிக்கி சிதறியது. உடனே, அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள், அந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்எல்ஏ பீமா மாண்டவி, அவரது பாதுகாவலர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், காஷ்மீரிலும் தீவிரவாதிகள் ேநற்று நடத்திய தாக்குதலில் ஆர்எஸ்எஸ் நிர்வாகியும், அவருடைய பாதுகாவலரும் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் கிஷ்த்துவார் நகரில் உள்ள சுகாதார மையத்திற்கு நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சந்தர் காந்த் சர்மா, அவரது பாதுகாவலர் ராஜிந்தருடன் சென்றார். அதை கண்காணித்த தீவிரவாதிகள் திடீரென அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், ராஜிந்தர் சம்பவ இடத்திலேயே பலியானார். சர்மா படுகாயம் அடைந்தார். ஜம்மு நகரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top