News

ஈழப் போரில் இலக்கு வைக்கப்பட்டது புலிகளா? தமிழர்களா?

 

நாங்கள் எந்தவொரு இனத்தையும் இலக்கு வைத்து போரினை நடத்த வில்லை என்று அண்மையில் முன்னாள் பாதுகாப்புச் செயளாலர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருந்தார். இது சற்று சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் தீவிரப் படுத்தப்பட்ட பின்னரும் சரி, பேர் முடிவுக்கு வந்த பின்னரும் சரி, மகிந்த தரப்பினரால் நாங்கள் புலிகளுக்கு எதிராகவே போரை நடத்துகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராகவே போரை நடத்தினோம், பொது மக்களுக்கு எதிராக போரை நடத்த வில்லை என்று எல்லாம் கூறப்பட்டது.

அதனை தான் இப்போது எந்த ஒரு இனத்தினையும் இலக்கு வைத்து நடத்த வில்லை என்று சற்று வித்தியாசமாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். இவ்வாறு கூறுவதன் பின்னணி அடுத்த ஜனாதிபதியாகும் கனவு அவரை கடுமையாகவே தொந்தரவுக்குள்ளாக்குகின்றது போல என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அடுத்த ஜனாதிபதியாக அமெரிக்க குடியுரிமையை கூட கைவிட தயாராகி விட்டார். அடுத்தக்கட்டமாக தமிழர்களின் தயவு தேவைப்படுகின்றது. தன்னை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்க வில்லை, அவரை நகர்புர சிங்கள மக்களே ஜனாதிபதியாக்கி விடுவார் என்று உறுதியாக இருக்கின்றார்.

ஆனால், ஒரு விடயம் தன்னை எதிர்த்து போட்டியிடும் பிரதான வேட்பாளரை தமிழர் ஆதரித்து விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாகவே உள்ளார். அதனால் தான் தமிழ் மீதான கறையை அவர் கழுவும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

நாங்கள் எந்தவொரு இனத்தையும் இலக்கு வைத்து போரினை நடத்த வில்லை, தீவிரவாதத்தினை வேரோடு அழிக்கும் நோக்குடனே போரினை நடத்தினோம் என்று கூறியது அதன் ஓர் அங்கமே. இதன் மூலம் அவர் எப்படி கறையை கழுவிக் கொள்ள போகின்றார் என்பது ஒரு புறம் இருக்க, கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தமிழர்களை இலக்கு வைத்துப் போரை நடத்த வில்லை என்ற மழுப்பலுக்கு தமிழர் தரப்பு ஒரு வலுவான மறுப்பினை பதிவு செய்துள்ளதா என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச தரப்போ, மகிந்த தரப்போ மாத்திரம் இன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட அண்மையில் படையினரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் இதே போன்ற கருத்தினையே வெளிப்படுத்தினார்.

தமிழர்களை இலக்கு வைத்து படையினர் போரினை நடத்த வில்லை என்று. கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே, அரசதரப்பில் உள்ளவர்களும் போரை நடத்தியவர்களும் தாங்கள் படையினருக்கு எதிராக போரை நடத்த வில்லை என்பதை வண்மையாக மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புலிகளுக்கு மாத்திரம் இன்றி, தமிழர்களுக்கு எதிராகவும் தான் நடத்தப்பட்டது என்ற உண்மையை தமிழர் தரப்பும் முற்று முழுதாக நிறுவவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்டது என்ற விடயத்தில் முரண்பாடு இருந்தாலும் புலிகளுக்கு எதிராக போர் நடத்தப்பட்டது என்பது சரி. ஆனால் அந்த யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், காணாமல் ஆக்கப்பட்டதும், காயப்படுத்தப்பட்டதும் எதனை உணர்த்தியிருக்கின்றது?

போரில் பொது மக்கள் கொல்லப்படுவது வழமை என்று இராணுவதளபதி கூறியிருந்தார். உண்மைதான், ஆனால் வன்னியிலும் ஏனையப் பகுதிகளிலும் போர் நடத்தப்பட்ட போது எத்தனையோ தடவைகள் பொது மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

புலிகளை இலக்கு வைப்பது என்ற பெயரில் விமானங்களினாலும், பீரங்கியினாலும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் குறி வைக்கப்பட்டது ஏன்? இது ஒரு இனத்திற்கு எதிரான போர் இல்லையா?  போர்க்காலத்தில், கொழும்பிலும், வடக்கு,கிழக்கிலும் தமிழர்கள் மட்டும் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டார்கள். கடத்தப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள். அடையாள அட்டைகளின் பெயர்களைப் பார்த்து தமிழர்களாக இருப்பவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சந்தேகத்துடன் கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைக்காக இழுத்து செல்லப்பட்டனர்.

தமிழர்களை மாத்திரமே, அடையாளப்படுத்தி எல்லாவற்றையும் செய்து விட்டு, இப்போது இனத்தைக் குறிவைத்து போரை நடத்தவில்லை என்றால், அது எந்த வகையில் உண்மையாக இருக்க முடியும்?

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top