India

இந்தியாவில்250 கிமீ வேகத்தில் துவம்சம் செய்த பானிபுயல்.. வீடுகள் மீது விழுந்த கிரேன்! நொறுங்கிய கட்டிடங்களின் பதற வைக்கும் வீடியோ

புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவாகி மிரட்டிக் கொண்டிருந்த பயங்கரமான ‘பானி’ புயல், நேற்று காலை ஒடிசா மாநிலத்தில் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 250 கிமீ வேகத்தில் காற்று வீசி அதிபயங்கரமாக தாக்கியது. அதன் கோரத்தாண்டவத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

 

 

வங்கக்கடலில்  கடந்த வாரம் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.  பின்னர், புயலாக மாறியது. இதற்கு ‘பானி  ’என பெயரிடப்பட்டது. இந்த புயல் முதலில் குறிவைத்தது தமிழகத்தைத்தான். இதனால், சென்னை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

 

 

ஆனால், திடீரென திசை மாறிய ‘பானி’, ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. புயல் பாதிப்புக்கள் குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டது. தாழ்வான, கடலோர பகுதிகளில் வசித்த 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு  உள்ளனர். 880 சிறப்பு நிவாரண முகாம் உட்பட மொத்தம் 4 ஆயிரம் நிவாரண முகாம்களில் இவர்கள் தங்கியுள்ளனர்.

 

 

 

ஒடிசாவில் பூரி நகரத்துக்கு அருகே புயல் நேற்று பிற்பகலில் கரை கடக்கும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால், நேற்று காலையே அது கரையை கடக்க தொடங்கியது. காலை 8.30 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கியது. 10 மணிக்குள்ளாக அது முழுவதுமாக கரையை கடந்தது. 11.30 மணியளவில் புவனேஷ்வருக்கு கிழக்கே 10.கிமீ மற்றும் கட்டாக் தெற்கே 30 கிமீ ெதாலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. புயல் கரையை நெருங்கியதும் 250 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி அதிபயங்கரமாக தாக்கியது. அப்போது, பேய் மழை கொட்டியது.

 

அதன் கோரத்தாண்டவத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேறுடன் சாய்ந்தன. மின் கம்பங்கள் அடியோடு வீழ்த்தன. வீட்டின் மேற்கூரைகள் வானத்தில் பறந்தன. பெட்ரோல் பங்க்குகளின் இரும்பு கூரைகளும், பல அடுக்கு வீடுகளின் கண்ணாடிஜன்னல்கள், கதவுகளும் கூட தப்பவில்லை. காற்றின் வேகம் தாங்காமல் நொறுங்கி சிதறின. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், பானியின் கோரத்தாண்டவத்தை பார்த்து பீதியில் ஆழ்ந்திருந்தனர்.கன்ஜம், குர்தா மற்றும் கஜபதி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது. புயல் பாதிப்பு காரணமாக அசம்பாவிதங்களை தடுக்க, முன்கூட்டியே பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. தொலைதொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. காலை 10 மணி அளவில் புயல் மொத்தமாக கரையை கடந்தது. புயலின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பூரியில் மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் இறந்தார். நயாகரில் வீட்டின் மேற்கூரை பறந்து சென்று விழுந்ததில் பெண் பலியானார்.

 

மேலும், கேன்ட்ரபாரா மாவட்டத்தில் நிவாரண முகாமில் தங்கி இருந்த வயதான பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். புவனேஷ்வரில் மரங்கள் வேருடன் சாய்ந்ததில் போக்குவரத்து முடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு குழு, கடற்படை, கடலோர காவல்படை, ராணுவம் மற்றும் விமான படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பானி புயல் கரையை கடந்தாலும் ஒடிசாவின் பாலசோர், மயூர்பன்ச் மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக, நூற்றுக்கணக்கான ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் ஆங்காங்கு முடங்கி கிடந்தனர். புவனேஷ்வர் மற்றும் கொல்கத்தாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. நேற்று பிற்பகல் 3 மணியில் இருந்து இன்று காலை 8 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

 

ஒடிசாவில் கடந்த 1999ம் ஆண்டு தாக்கிய புயலில் 10 ஆயிரம்  பேர் உயிரிழந்தனர். இது வரலாற்றிலேயே மிக பெரிய இயற்கை பேரிடராக கருதப்படுகிறது. எனவேதான், ‘பானி’ புயல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் உக்கிரமானதாக இருந்ததால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புயல் வேகத்தில் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல் முறை. இந்த ஏற்பாடுகள் காரணமாகவே, பானி புயல் பலி கணிசமாக குறைக்கப்பட்டது. கோடை காலமான ஏப்ரலில் இதுபோன்ற பயங்கர புயல், 40 ஆண்டுகளுக்குப் பிறகு  உருவாகி இருக்கிறது.

 

ஒடிசாவை கடந்துள்ள பானி புயல், மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  அம்மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பானி புயல் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அடுத்த 48 மணி நேரத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தனது அனைத்து தேர்தல் பிரசாரங்களையும் ரத்து செய்துள்ளார். இதேபோல், பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

மேற்கு வங்கத்துக்குள் நுழையும்போது பானி புயல் வலுவிழக்கும் என வானிலைஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்னர். மணிக்கு 100 முதல் 110 கிமீ. வேகத்தில் காற்று வீசும். கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

மிக மிக நீளமான புயல்ஒடிசாவில் பானி புயல் கரையை கடந்தபோது, வரலாறு காணாத வகையில் பானி புயல் மிக நீளமானதாக இருந்தது.  28 கிமீ சுற்றளவு கொண்ட இந்த புயலின் மையப்பகுதி மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்தது. இதனால், ஒரு இடத்தை அது கடப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. குர்தா, கட்டாக், ஜெய்ப்பூர், பாத்ராக் மற்றும் பாலசோர் வழியாக இது கரையை கடந்தது. முதலில் 175 கிமீ வேகத்திலும், பின்னர் 250 கிமீ என காற்றின் வேகம் அதிகரித்தது. 3 மணி நேரத்துக்குப் பிறகு புயல் பலவீனமானது. பின்னர், படிப்படியாக காற்றின் வேகம் குறைந்தது.

 

பானி புயல் தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், இது அண்டை நாடான வங்க தேசத்துக்குள் குல்னா கடற்கரை பகுதி வழியாக நுழையும் எனவும் இந்திய வானிலை துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வெள்ளிகிழமை இரவு மற்றும் இன்று வரை வங்கதேசத்தில பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று பிற்பகலில் 5.50 லட்சம் பொதுமக்கள் வங்கதேசத்தின் கடற்கரை மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top