இலங்கை குண்டுவெடிப்பில் குடும்பத்தை இழந்த கோடீஸ்வரரின் பெருந்தன்மை: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார மையம் ஒன்றை நிறுவ உள்ளார்

இலங்கை ஈஸ்டர் நாள் தற்கொலை தாக்குதலில் 3 பிள்ளைகளை பறிகொடுத்த ஸ்காட்லாந்து கோடீஸ்வரர் தமது பிள்ளைகளின் நினைவாக சுகாதார மையம் ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சுகாதார மையமானது ஸ்காட்லாந்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு பேருதவியாக அமையும் என நம்பப்படுகிறது.
ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானியாவில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் ஆண்டர்ஸ் ஹோஷ் போவ்ஸ்ஸென். கடந்த மாதம் தமது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற இவர், ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகள் முன்னெடுத்த தற்கொலை தாக்குதலில் தமது 3 பிள்ளைகளை பறிக்கொடுத்தார்.
ஸ்காட்லாந்தில் அவர்களுக்கு நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களின் நினைவாக ஸ்காட்லாந்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு உதவும் வகையில் சுகாதார மையம் ஒன்றை நிறுவ திட்டமிட்டு, அதன் ஆயத்த பணிகளில் களமிறங்கியுள்ளார்.
46 வயதான போவ்ஸ்ஸென் என்பவருக்கு ஸ்காட்லாந்தில் மட்டும் 13 எஸ்டேட்டுகள் உள்ளன. தமது பிள்ளைகள் மூவரை இலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு பறிகொடுக்கும் முன்னர், அந்த 13 எஸ்டேட்டுகளையும் அவர்கள் பெயரில் மாற்ற முடிவு செய்திருந்தாராம் போவ்ஸ்ஸென்.