கனடாவில் விற்கப்பட்ட சுமார் 200-திருடப்பட்ட கணணிகள் – ஒருவர் கைது!

ஈட்டோபிக்கோ பகுதியில் விற்கப்பட்டதாக கூறப்படும், திருடப்பட்ட சுமார் 200 கணணிகளை கைப்பற்றியுள்ள பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர், 42 வயதான ஃபஹாட் மொஹமட் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் மீது குற்றச் செயல் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட கணணிகளை வைத்திருந்தமை, குற்ற செயல் மூலம் பெறப்பட்ட பொருட்களை கடத்தி வந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்பியன் வீதி மற்றும் இஸ்லிங்டன் அவனியூ பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம், இஸ்லிங்டன் அவனியூ மற்றும் நெடுஞ்சாலை 401இல் அமைந்துள்ள வீடு ஒன்றில், பாரிய குற்றத் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே, 190 அப்பிள் மக் ரக கணணிகள் மற்றும் 32,640 டொலர் ரொக்கப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கணணிகளில் 42 கணணிகள் அவற்றினுடைய சட்டபூர்வ உரிமையாளர்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இழந்த தமது கணணிகளை மீளப் பெற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போது திருட்டுக் கணணிகளை விற்பனை செய்த வரை கைது செய்துள்ள நிலையில், அவற்றை திருடியோரை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.