துப்பாக்கிச் சூட்டில் தன்னுயிரைக் கொடுத்து சக மாணவர்களை காப்பாற்றிய ஹீரோ இளைஞர்: நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து ஹீரோ இளைஞர் ஒருவர் தன்னுயிரைக் கொடுத்து சக மாணவர்களை காப்பாற்றியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடக்கு கரோலினாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அரங்கேறியுள்ளது. அங்கு பயிலும் டிரிஸ்டான் ஆண்ட்ரூ என்ற 22 வயது மாணவன் திடீரென்று தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சக மாணவர்கள் மீது சரமாரியாக சுடத் துவங்கியுள்ளார்.
இச்சமயம் ரிலே ஹோவெல் என்ற 21 வயது மாணவன் அந்த அறைக்குள் நுழைந்துள்ளான். அப்போது துப்பாக்கியுடன் எதிர்பட்ட டிரிஸ்டானை வலுக்கட்டாயமாக தரையில் தள்ளிவிட முயன்றுள்ளான். ஆனால் இதில் வெற்றி கண்டிருந்தாலும், ரிலே ஹோவெல் துப்பாக்கி குண்டுக்கு இரையாகியுள்ளார். மட்டுமின்றி 19 வயதான ரீட் பாலியர் என்ற மாணவனும் கொல்லப்பட்டார்.
ஹோவெலின் துணிச்சலான முடிவானது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை கைது செய்ய உதவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி சக மாணவர்கள் பலரின் உயிரையும் அவரது நடவடிக்கை காப்பாற்றியுள்ளது என பொலிசார் பாராட்டியுள்ளனர்.
நிபுணர்களும் இதுபோன்ற சூழலில் ஹோவெல் மேற்கொண்ட நடவடிக்கையையே பரிந்துரைக்கின்றனர். தாக்குதல் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பிக்க முயல வேண்டும் அல்லது தாக்குதல்தாரியை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவரின் நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது.