பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரைத் தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கும் இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து இராணுவத்தினரை இங்கு நிலை நிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.
வடக்கு மாகாணம் தொடர்ந்தும் உச்ச அளவில் இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்ந்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன.
பொது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அவர்கள் அபகரித்துள்ளனர். இது நல்லிணக்கத்துக்கும் நிலையான சமாதானத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர்,பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கின்றமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் ஒரு துன்பியல் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முற்பட்டுள்ளதை அறியாதிருக்கும் இவர்கள் மேல் பரிதாபம் மேலோங்குகின்றது. தீர்வு முயற்சிகள் ஒரு புறம் இருக்க,தற்போதைக்கு பொலிசார் மூலம் எமது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கை எமது மக்களே எமது பகுதிகளில் பொலிசாருடன் சேர்ந்து நிர்வகிக்க முடியும்.
இதனை விடுத்து,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து இராணுவத்தைத் தொடர்ந்து பெருமளவில் வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கு நியாயம் கற்பிப்பது எந்த வகையிலும் பொருத்தம் அற்றது. மிகவும் தெளிவான முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுங் கூட எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் விட்டமையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது.
கடந்த காலங்களில் அவசரகால நிலைமை எந்தளவுக்குப் பொதுமக்களின் சுதந்திரங்களைப் பாதித்ததுடன் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது என்பதை நாம் கண்டுள்ளோம். இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை மீண்டும் அந்த நிலைமை ஏற்படப்போகின்றதோ என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவர்களின் கைதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன். நாடாளுமன்றத்தில் அவசரகால நிலைமைக்கு ஆதரவாகச் செயல்ப்;பட்டு விட்டு இன்று எமது மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அவர்களை விடுதலை செய்யுமாறு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோருவது வேடிக்கையாக இருக்கின்றது.
ஆகவே, அண்மைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களையும் அவற்றுக்குத் தூண்டுகோல்களாக இருந்தவர்களையும் இனம் கண்டு கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் இயன்றளவு விரைவாக அவசரகாலப் பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும், அவசரகாலச் சட்டத்தை வைத்து அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கின்றேன். பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் பொலிஸ் திணைக்களத்தைப் பலப்படுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றேன்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<