மாயமான கனேடிய தாயாரும் மகளும் எரித்துக் கொல்லப்பட்டனரா? திணறும் பொலிசார்

கனடாவில் மாயமான தாயாரும் மகளும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் உண்மையை ஒப்புக்கொண்டால் மட்டுமே மாயமானதாக கருதப்படும் தாயார் மற்றும் மகளின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவரும் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே குறித்த இருவரது சடலங்களை தேடி வந்த பொலிசார் கடும் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக தேடுதலை நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 25 வயதான ஜாஸ்மின் லொவட் மற்றும் அவரது மகளான 22 மாத அலியா சாண்டர்சன் ஆகிய இருவரும் மாயமாகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் 34 வயது ராபர்ட் லேமிங் என்ற பிரித்தானியரை சந்தேகத்தின் அடிப்படையில் கனேடிய பொலிசார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.
மாயமான ஜாஸ்மின் பிரித்தானியரான லேமிங் உடன் ஒரே குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளார். ஆனால் லேமிங் இந்த விவகாரத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என உறுதிபட தெரிவித்து வருகிறார்.
இருப்பினும், தாயார் மற்றும் அவரது 22 மாத பிள்ளையை கொலை செய்து சடலத்தை எரித்து சாட்சியங்களை அழித்திருக்கலாம் என பொலிசார் லேமிங் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.