எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறும் அக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இன்று சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கும் விக்னேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடராதிருக்கும் வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களை கைதுசெய்யும் வகையில் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் அஞ்சுவதாகவும் சாதாரண சட்டத்தின் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் அவசரகால தடை சட்டம் இல்லாமல் செய்யப்பட்டபின்னர், குற்றங்களாகக் காணப்படாத விடயங்களும் செயற்பாடுகளும், தற்போது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக மீண்டும் அவசர கால நிலைமை கொண்டுவரப்பட்டு அவை குற்றங்களாகக் காணப்படும் நிலைமை உருவாகி இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் எடுத்துக்கூறி இருக்கின்றார்.

அத்துடன், மீண்டும் அவசரகால நிலைமை கொண்டுவரப்பட்டதன் ஒரே நோக்கம்ரூபவ் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்காகவே என்று இருக்கும்போது,  இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத தமிழ் மாணவர்களைக் கைதுசெய்திருப்பது முறையற்றது என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படங்கள் நீண்ட காலமாகவே அங்கு இருப்பதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், அவசரகால பிரகடனத்துக்கு முன்பாக இந்தப் படங்களை வைத்திருப்பது குற்றங்களாகக் கணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு விகாராதிபதி மங்களராமய தேரர் பிரபாகரனை புகழ்ந்து பேசியமையையும், இதேமாதிரியான கருத்துக்களை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் வெளியிட்டுள்ளமையையும், பிரபாகரனின் நிர்வாகத்தை புகழ்ந்து பேசிய விஜயகலா மகேஸ்வரன் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிப்பதையும் எடுத்துக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், இவற்றின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வேண்டுமென்று செய்யப்பட்ட நடவடிக்கை போல் தோன்றுகின்றது என்றும் அதனால் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் வீடுகளையும் ஏனைய அவர்களின் இடங்களையும் சோதனையிடுவதற்கு உத்தரவிடப்பட்ட இராணுவம் ஏன் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தது என்று கேள்வி எழுப்பி இருக்கும் விக்னேஸ்வரன், குறிப்பாக கலைப்பீட மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடங்களில் வட மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை ஒழுங்குசெய்தபோது இந்த மாணவர்களே பெரும் உதவிகளைச் செய்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு மே 18 ஆம் திகதி நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் பத்தாம் வருட நினைவு கூரல் நிகழ்வுகளைக் குழப்பும் வகையிலும் இராணுவ பிரசன்னத்தை வடக்கில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள துரதிஷ்டவசமான தற்போதைய சூழ்நிலையை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

2013 ஆம் வட மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டது முதல் இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்றுமாறு தாம் வலியுறுத்திவருவதாக மீண்டும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், 1960 களில் இராணுவத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும் உயர் கல்வியில் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டு தமிழ் மாணவர்கள் பாகுபாடு காட்டப்பட்டமையும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தன என்றும் அதேபோல மீண்டும் இராணுவ அடக்குமுறைகளை மேற்கொண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள இடமளித்துவிடவேண்டாம் என்றும் அவர் தனது கடிதத்தில் ஜனாதிபதிக்கு வலியுறுத்தி இருக்கின்றார்.

அதேவேளை விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெறுவது சாத்தியம் இல்லை என்றும் அவர்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் இராணுவ தளபதி அண்மைய காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளதை குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன். ‘ஒவ்வொரு சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளை காரணம் காட்டுவதை நான் விரும்பவில்லை. எப்பொழுதும் ஏதாவது நடைபெறும்போது விடுதலைப்புலிகளை அவற்றுடன் தொடர்புபடுத்துவது இலகுவானது. ஆனால் இது உண்மைக்கு வெகுதூரம் புறம்பானது’ என்று இராணுவ தளபதி ஒரு சந்தர்ப்பதில் குறிப்பிட்டுள்ளதை உதாரணம் காட்டியுள்ளார்.

ஆதலால், எந்தவித நிபந்தனைகளும் இன்றி கைதுசெய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலைசெய்யுமாறு மாணவர்களின் சார்பாக வேண்டிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.