24 மணி நேரத்தில் 450 ராக்கெட்டுகள்… இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நிலவும் பதற்றம்!

ஹமாஸ் போராளிகள் நேற்று மாலை காசா முனையில் இருந்து சுமார் 450 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டின் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் உள்ள காசா முனையில் இருந்து, பாலஸ்தீனாவை சேர்ந்த ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இஸ்ரேல் ராணுவத்தினர் பதிலடி கொடுப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் போராளிகள் கடந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 450 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் இஸ்ரேல் நாட்டு மக்களில் வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், 80 வயது பெண்மணி உட்பட 3 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது,
மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி, ஒரு வயது குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் நடந்த உச்சகட்ட தாக்குதலில் 270-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.