இந்தியாவின் பல மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் அதற்கு நேர் மாறாக வட மாநிலங்களில் வெயில் கடுமையாகி இருக்கிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் வைத்தியவாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 36 பேரும் கயா மாவட்டத்தில் 28 பேரும் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பீகாரை கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சலும் கடுமையாகத் தாக்கி வருகிறது.

இந்நிலையில் முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நேரத்தில் வெயில் கொடுமை, மூளைக்காய்ச்சல் என இரட்டை தாக்குதலுக்கு பீகார் உள்ளாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.