News

அமேசானில் காட்டுத் தீ: ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை நிபந்தனையுடன் ஏற்க தயார்…பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ பேட்டி

பிரேசிலியா: அமேசானில் காட்டுத் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்க தயார் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ தெரிவித்துள்ளார். அமேசான் காட்டில் 60 சதவீதம் பிரேசில் நாட்டில் உள்ளது. மீதிப்பகுதிகள்  பொலிவியா, கொலம்பியா, ஈக்வெடார், பிரெஞ்சு கயானா, கயானா, பெரு, சுரினேம் மற்றும் வெனிசுலா நாடுகளில் உள்ளன. பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத் தீ  பற்றி எரிந்து வருகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ஆக்ஜிசனில் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் அமேசான் காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, ஜி7 அமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ்  நகரில் நேற்று முன்தினம் முடிந்தது. ஜி7 கூட்டத்தின் இறுதிநாளான நேற்று முன்தினம் அமேசான் காட்டுத் தீ பற்றி விவாதிக்கப்பட்டது. இது உலகத்தின் பசுமை நுரையீரல் மீதான தாக்குதல் என ஐரோப்பிய தலைவர்கள் கூறினர். இந்த  கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ‘‘அமேசான் காட்டுத் தீயால்  பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ உலக தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அமேசான் காடு நம் கண்முன் பயங்கரமாக பற்றி எரிவதை கடந்த ஒரு வாரமாக பார்க்கிறோம். அமேசான் காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க இங்கிலாந்து 10 மில்லியன்  பவுண்ட் பணத்தை(ரூ.88கோடி) விரைவில் வழங்கும்’’ என்றார். இறுதியாக, அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி  வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது. ஆனால், ஜி 7 நாடுகளின் உதவியை  பிரேசில் அதிபர் சயீர் போல்சோனரோ நிராகரித்து  விட்டார். இது தொடர்பாக அவரது அரசின் முதன்மை செயலர் ஓனிக்ஸ் லோரன்ஜோனி கூறிய போது, “இந்த உதவிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இந்த நிதியைக் கொண்டு ஐரோப்பிய  நாடுகளில் காடுகளை வளர்த்து கொள்ளுங்கள்.  பிரான்சையும் அதன் காலனி நாடுகளையும் கவனித்து கொள்ளுங்கள்,’’ என்றார்.

இந்நிலையில், இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ, ஜி7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள நிதியை தாங்கள் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிதியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக  சில நிபந்தனைகள் இருப்பதாக அவர் கூறினார். முதலாவதாக, தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக பிரான்ஸ் அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னை பொய்யர் என்றும், பின்னர் அமேசானில்  தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது என்றும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தக் கருத்துக்களை திரும்பப் பெற்றபிறகே, பிரான்ஸுடன் பேச முடியும் என்று அவர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top