News

எங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டும்! மகிந்த ராஜபக்ச

எங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எங்களுடன் இணைந்து ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி : நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, 6 மாதக் காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்படுமென்று டக்ளஸ் தேவானந்த எம்.பி கூறியுள்ளார். இது சாத்தியமா?

கொடுக்க முடிந்தால் நாம் கொடுப்போம். காரணம், இதுபற்றி நாம் பேசவேண்டும். உடனடியாக, சரி கொடுப்போம் என்று கூறிவிட முடியாது. 13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எனக்கு வாக்களிக்காமல், என்னிடம் அந்தத் தீர்வை அவர்கள் எதிர்பார்க்க முடியாது.

வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும். தவிர, எங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. எங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், எங்களுடன் இணைந்து ​ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளலாம்.

கேள்வி : நீங்கள் என்னதான் வாக்குறுதிகளை வழங்கினாலும், மீண்டும் தாம் ஏமாற்றப்படுவோம் என்ற எண்ணமே இப்போது தமிழ் மக்களுக்கு உள்ளது. அந்த எண்ணத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யவுள்ளீர்கள்?

வாக்குறுதியளித்துவிட்டு, எதை நாம் செய்யாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கூறுங்கள். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் 99 சதவீதமானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கவில்லை. தெற்கிலுள்ள மக்கள், எனக்கு முதன்முறையாக வாக்களிக்கும் போது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்றுதான் கோரினார்கள். அதை நான் நிறைவேற்றினேன்.

அந்த நம்பிக்கையில் தான், இரண்டாவது முறையாகவும் அவர்கள் என்னையே தேர்ந்தெடுத்தார்கள். அந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததால் தானே, இன்று தமிழ் மக்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். இவ்வாவிட்டால், எத்தனை உயிர்களை இந்த யுத்தம் காவுகொண்டிருக்கும். தமிழ் மக்கள் மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் அனைவரும், இந்த யுத்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதனால் நான் உறுதியாகக் கூறுவதென்னவென்றால், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top