சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல்  உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர்கள் எமக்கு தகவல் அளித்து உதவி கோரினால் எம்மால் முடியுமான அனைத்தையும் அவ்வச்சுறுத்தலை முறியடிக்க முயற்சிகளை முன்னெடுப்போம் என இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன்  ஸ்டொக் தெரிவித்தார்.

21/4 தொடர் தற்கொலை தாக்குதலைத் தொடர்ந்து இன்டர்போலின்  ‘ உடன் நடவடிக்கை குழு’ இலங்கையில் தங்கியிருந்து,  குறித்த  பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை குறித்து ஆராய்ந்து பார்க்க  இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன்  நேற்று இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுத்திருந்தார்.

இந் நிலையில் இங்கு வந்த அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் மட்ட தலைவர்களை சந்தித்த பின்னர் இன்று மாலை கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

இதன்போது சர்வதேச பொலிஸாரின் கணிப்புப்படி இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்  உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குற்றப் புலனயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, குற்றப் புலனயவுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்ஜித் வெதசிங்க ஆகியோரும் இன்டர் போல் செயலாளர்நாயகத்துடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.