Canada

பிரம்டனில் இருவேறு இடங்களில் கத்திக்குத்து: பொலிஸார் தீவிர விசாரணை

 பிரம்டனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வில்லியம் பார்க்வே மற்றும் டோர்பிரம் வீதிப் பகுதியில், ஜோஸ்பைன் கோர்டில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 5:45 அளவில் 53 வயதான தாய் மற்றும் 13 வயதான மகன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், பொலிஸார் மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பகுதிக்கு சில வீதிகள் கடந்துள்ள வில்லியம் பார்க்வே அருகில் நெடுஞ்சாலை 410இல் 51 வயதான ஆணொருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார், சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவங்கள் தொடர்பில், எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார், விசாரணை நடவடிக்கைகள் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், இந்தச் சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது இல்லை என்று எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும். இச்சம்பவம் தொடர்பில், தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார். பொதுமக்களிடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News

To Top