News

மௌனமாக இருந்த சம்பந்தன்! மைத்திரி கொடுத்த உத்தரவாதம்

நாங்கள் முன்வைத்திருக்கும் அத்தனை முறைப்பாட்டிற்கும் எதிர்வரும் நாட்களில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவாதம் கொடுத்துள்ளார் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிடுகையில்,

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டோம். முக்கியமாக இச்சந்திப்பில் நாங்கள் கேட்டுக் கொண்டது எதிர்வரும் முப்பதாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற செய்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

அப்படி நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற போது சென்ற ஆண்டு மயிலிட்டி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் உரையாற்றிய ஜனாதிபதி கடந்த ஆண்டு அதாவது 2018ஆண்டு டிசம்பருக்குள் தனியார் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார். இதனை நினைவுபடுத்தும் முகமாகவும் இச் சந்திப்பு இடம்பெற்றது.

இப்பொழுது மயிலிட்டி துறைமுகம் கடந்த மாதம் எங்களினாலும் பிரதமரினாலும் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அப்பிரதேசங்களைச் சேர்ந்த 1500 குடும்பங்கள் அத்துறைமுகத்திற்கு வருகை தந்து அதனைப் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றார்கள். அதற்காக அப் பிரதேசங்களை இராணுவத்தினர் இன்னமும் விடுவிக்கவில்லை.

அத்தோடு பலாலி பிரதேசத்தில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் பகுதி பகுதியாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் இருக்கின்றன. அப்பகுதிகளில் 2000ஆம் குடும்பங்களுக்கு மேல் அங்கே குடியேற வேண்டியிருக்கிறது. ஆகவே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகின்ற போது இன்னமும் விடுவிக்கப்படாத நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அதேபோன்று வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசங்களான முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறோம்.

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இதேவேளை பல பௌத்த குருமார் பௌத்த மக்கள் வாழ்வியலைக் கொண்டிறாத இடங்களிலும் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி வருகின்றார்கள்.

யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு கிழக்கில் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்து மக்களின் செயற்பாடுகளுக்கும் அவர்களுக்கு விரோதமான செயற்பாடுகளுமாக அமைந்திருக்கின்றன. இது தொடர்பிலும் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதனை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி எதிர்வரும் 28ஆம் திகதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இராணுவ அதிகாரிகளையும் மகாவலிக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள் அதேபோன்று வன இலாக்காவுக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள் தொல்பொருள் திணைக்களங்களுக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளையும் அழைத்து அக்கூட்டத்தில் நாங்கள் செய்திருக்கும் முறைப்பாடுகளுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் என்னும் உத்தரவாதத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்.

ஆகவே எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான கூட்டம் நடைபெறும். இக் கூட்டத்தில் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி தந்திருக்கிறார். இக் கூட்டத்தில் எங்கள் நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு எங்கள் பிரதேசங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் திட்டவட்டமாக பேசுவோம் என்றார்.

முன்னதாக இச் சந்திப்பில் இரா.சம்பந்தன் ஜனாதிபதியுடன் அதிகளவில் பேசவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன். இச் சந்திப்பின் போது மாவை சேனாதிராசாவே அதிகமாக பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார். வழக்கமான சந்திப்புக்களில் சம்பந்தன் தமிழர் தரப்பு கோரிக்கைகளை மிக தெளிவாக எடுத்துரைப்பது வழமை ஆனால் இம்முறை சம்பந்தன் கதைக்காமை ஜனாதிபதிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும்போது, காணி விடுவிப்பு தொடர்பான அறிவித்தலை வெளியிட வேண்டுமென மாவை சேனாதிராசா குறிப்பிட்டார். இதன்போது, குறுக்கிட்ட இரா.சம்பந்தன், அறிவித்தல் விடுப்பதல்ல, காணியை விடுவிக்க வேண்டுமென்றார். எனினும், ஜனாதிபதி அது குறித்து தெளிவான பதில் அளிக்கவில்லை.

பௌத்த மயமாக்கல் மற்றும் பௌத்த தேரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் மாவை சேனாதிராஜா முறையிட்ட போது ஜனாதிபதி மைத்திரி, பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்கு பிரச்சினைகளை தந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்த இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top