News

ஐ.தே.க பிளவுபட இடமளிக்கப்பட மாட்டாது! தனித்தனியே உறுதியளித்துள்ள ரணில் மற்றும் சஜித்

எந்த காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என தனித்தனியே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாசவும் அங்கு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதே இந்த உறுதிமொழியை தனித் தனியே வழங்கியுள்ளனர்.

“நாங்கள் ஐ.தே.கவின் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால், கடந்த நான்கு வருடங்களாக வெளியில் இருந்து இந்த ஐ.தே.கவின் அரசை காப்பாற்றி வந்திருக்கின்றோம்.

நெருக்கடி நேரத்தில் நெருங்கி வந்து உதவியிருக்கின்றோம். இப்போதும் உதவி வருகின்றோம்.

ஐ.தே.க. பிளவுபட்டுப்போனால், அது ஐ.தே.கவுக்கு மட்டும் பாதிப்பல்ல. பல தரப்புகளுக்கும் பாதிப்பு. உங்களுக்கு ஆதரவு தந்து நின்ற எமக்கும் பாதிப்பு.

உங்கள் கட்சியின் உள்வீட்டு விடயத்துக்குள் நாங்கள் வரப்போவதில்லை; வரமாட்டோம். ஆனால், கட்சியை உடைக்காமல், பிளவுபடுத்தாமல் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அது உங்கள் கட்சியின் விடயம்.

அதில் நாம் தலையிடோம். ஆனால், கட்சி பிளவுறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில், சஜித் ஆகிய இருவருக்கும் ஆலோசனை கொடுத்துள்ளனர்.

அதனை முற்றும் முழுதாக ஏற்றுக்கொண்ட ரணிலும், சஜித்தும் எந்த காரணம் கொண்டும் கட்சியை நாம் உடைக்க விட மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளனர் என அறியக்கிடைத்துள்ளது.

Latest News

To Top