இந்தியாவின் கர்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் தண்ணீர் புகுந்த நிலையில் அதில் சிக்கிய 13 பேரை கடலோர காவல் படையினர் மீட்ட நிலையில் மாயமான 7 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்தில், திரிதேவி பிரேம் என்ற சரக்கு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. டிரெட்ஜர் எனப்படும் தூர்வாரும் உபகரணங்களைக் கொண்ட அந்தக் கப்பலில், 20 ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (2ம் திகதி) அதிகாலை 2.30 மணி அளவில், சூறை காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியதனால், கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அந்த கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது.

 

 

இதுகுறித்து உடனடியாக கடலோர காவல் படைக்கு அவசர உதவி அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, அமர்தியா கப்பலுடன் கடலோர காவல் படையினர் விரைந்து சென்றனர்.

அங்கு நிலவிய இருட்டு மற்றும் மோசமான வானிலையை அவர்கள் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயற்பட்டு, கப்பலில் சிக்கித் தவித்த 13 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.

அதேவேளை, டிரெட்ஜர் உபகரணத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 ஊழியர்கள் மாயமான நிலையில் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.