யேமனில் இடம்பெற்றுவரும் யுத்த குற்றங்களில் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டனிற்கு தொடர்புள்ளது என ஐக்கியநாடுகள் விசாரணையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யேமனில் பொதுமக்களிற்கு எதிராக யுத்தகுற்றங்களில் ஈடுபடும் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயுதங்களையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கிவருவதன் மூலம் இந்த நாடுகள் யுத்த குற்றங்களிற்கு துணைபோகின்றனர் என ஐநா விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியும் ஐக்கிய அரபு இராச்சியமும் யேமனில் பொதுமக்களை விமானதாக்குதல்கள் மூலம் கொலை செய்து வருவதாக தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் கடும் வரட்சியை சந்தித்து வரும் மக்களிற்கு உணவு சென்றடைவதை சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் நகரங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் சிறுவர்களை படையணிகளில் ஈடுபடுத்துகின்றனர் எனவும் ஐநா நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

யேமனில் பாரிய வரட்சி சூழ்நிலை காரணமாக உலகின் பாரிய மனிதமாபிமான நெருக்கடி உருவாககூடிய சூழல் எழுந்துள்ளது என  ஐநா தெரிவித்துள்ளது.

யேமன் அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் சவுதி அரேபியா ஐக்கிய அரபு இராச்சிய கூட்டணியை சேர்ந்தவர்களும் விமானதாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம்,பட்டினி போடுதலை ஒரு யுத்த தந்திரோபாயமாக பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் இது யுத்தத்திற்கு சமனானது எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆயுதவிநியோகம் எவ்வளவு சட்டபூர்வமானது என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.