News

 ஹாங்காங்கில் தடையை மீறிய போராட்டம் தீவிரம்: போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் வீச்சு

ஹாங்காங்: ஹாங்காங்கில் தடையை மீறிய போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் இன்றும் பதற்றம் நீடிக்கிறது. நாடாளுமன்ற கட்டடத்தின் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். ஆங்காங்கே தீவைப்பு மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் வீச பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அங்கு போராட்டங்கள் வெடித்தன.

இந்த போராட்டங்கள் ஹாங்காங்கை உலுக்கியதை தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் மசோதாவை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன. ஜனநாயக ஆர்வலர்கள் முன்னெடுத்த இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை சுமார் 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டம் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஹாங்காங் போராட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது.

குற்றம் சாட்டப்படுவோரை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடந்து வருகிறது. சாலைகள் தோறும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்ற நிலையில் போலீசார் பல இடங்களிலும் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையையும் மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்த போது, சில இடங்களில் தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசு பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடக்கும் போராட்டத்தினால் சீன அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 13 வாரங்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டமும், பேரணியும் தற்போது வன்முறைக்களமாக மாறியுள்ளது. இந்நிலையில் வார இறுதிநாள் போராட்டத்திற்கு ஹாங்காங் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் நேற்று நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் சாலைத் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதையடுத்து அவர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. அதன் பின்னரும் கலவரம் கட்டுக்குள் வராததால் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது. போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால் ஹாங்காங்கில் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top