News

அப்பாவி மக்களைக் கொன்றழித்த இராணுவத்தினரே சிறையிலடைப்பு: கோத்தபாயவின் கருத்துக்கு ரவி தக்க பதிலடி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அநுராதபுரத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் நியாயமின்றி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பதாகக் கருத்தொன்றை முன்வைத்தார்.

யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்தி வைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிதண்ணீர் கேட்டுப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியவர்களுமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே தவிர, பிரதம நீதியரசரை நியமிப்பதற்கான தேர்தல் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களைவிடுவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவை வெற்றியடையச் செய்வதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் அங்கு வாழும் மக்களுக்கு ஏற்றவாறு பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ள மாட்டோம். எனினும், மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகண்டு, நவம்பர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு இளைஞர், யுவதிகளை முன்நிறுத்திய ஒரு புதிய பயணத்தை ஆரம்பிப்போம்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்புவரை மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்த காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் வெற்றிகண்டோம். அதனைத் தொடர்ந்து நாங்கள் உறுதியளித்ததைப் போன்று நாட்டில் உயர்ந்தபட்ச ஜனநாயகத்தை நிலைநாட்டினோம்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாட்டின்போதும் பெருமளவு மக்கள் கூட்டத்தைத் திரட்டினோம். இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அத்தகைய ஆதரவை வழங்குவதற்கு மக்கள் முன்வந்துள்ளமையைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அரச தொழிலாளர்களின் ஊதியத்தைப் பெருந்தொகையாக அதிகரித்தோம். அதேபோன்று இராணுவத்தினரினது சம்பளத்தையும் அதிகரித்தோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தோம். நாட்டில் குறித்த சில பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் விஸ்தரித்தோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் எமது கட்சியின் உறுப்பினர்களுடன் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து உருவாக்கிய புதிய ஜனநாயக முன்னணியின் ஊடாக எமது வெற்றிக்கான பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்” என்றார்.

 

 

Latest News

To Top