சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழர் தாயகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 9.35 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் சுனாமி அனர்த்தத்தின் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரத்தியேனமாக ஒரு இடத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக நினைவுப்பதாகை வைக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கையில் கோரத் தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலைமுதல் பல்வேறு நினைகூரல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.