ஐ.தே.க. விற்கு எதிர்காலம் இல்லாது போகும் அபாயம் – சரத் எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால், அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் தேசியப் பாதுகாப்பு இன்னும் பலமடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று ராஜித சேனாரட்ன அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுதான் ராஜபக்ஷக்களின் அரசியல் கலாசாரமாக இருந்து வருகிறது.
இவர்களைப் பற்றி நாம் நன்றாக அறிவோம். இதனை நாம் ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் கூறி வந்தோம்.
எனினும் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.
இது வெறும் ஆரம்பம் மட்டும்தான். இன்றும் ஒரு வருடம் சென்ற பின்னர், மக்கள் தாங்கள் செய்த பிழைகளை உணரும் அளவுக்கு அவர்கள் செயற்படுவார்கள்.
பாதுகாப்பு பிரதானிகளாக இராணுவத்தின் இருவரை நியமித்துவிட்டு, இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி கூறுகிறார்.
அப்படியானால், அவருக்கு தேசிய பாதுகாப்பு விடயத்தில் போதிய தெளிவில்லை என்பதையே காண்பிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பை ஓரிரு மாதங்களில் பலப்படுத்த முடியாது என்பதே உண்மையாகும்.
அத்தோடு, இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் இருகின்றன. கட்சி மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
கட்சியின் பொறுப்புக்களுக்கு புதியவர்கள் வரவேண்டும். இது நடைபெறாவிட்டால், நிச்சயமாக மக்கள் இந்தக் கட்சியை மறந்து விடுவார்கள்.
எனவே, காலத்தின் தேவையை உணர்ந்து உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
அந்தவகையில், சஜித் பிரேமதாசவுக்கு தலைமைப் பதவியை வழங்கினால்கூட அது பிழையில்லை என்பதுதான் எமது நிலைப்பாடாக இருக்கிறது.
ராஜபக்ஷவினர், இன்று சிங்கள- பௌத்தர்களின் பாதுகாவலர் என கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தேரர்களின் ஆதரவைப் பெற்ற சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டுதான், அரசாங்கம் வேலையை ஆரம்பித்துள்ளது. இதுதான் இன்றைய நிலவரமாக இருக்கிறது” என மேலும் தெரிவித்தார்.