கப்பலில் 200 பார்பிக்யூ அடுப்புகளை அனுப்பிய கனேடியர்: சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவுக்கு சந்தேகத்துக்குரிய வகையில் சில பொருட்கள் கப்பலில் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு துப்புக் கிடைக்க, கண்டெய்னர் ஒன்றில் 200 பார்பிக்யூ அடுப்புகள் இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர்.
அவற்றை எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது, அடுப்புகளின் அடிப்பாகம் போலியானது என்பது தெரியவந்ததுடன், அதற்கு அடியில் ஏதோ பிரௌன் நிற பொருள் இருப்பதும் தெரியவந்தது.
அடுப்புகளின் அடிப்பாகத்தை அகற்றிப் பார்க்க, அவற்றிற்குள் 645 கிலோகிராம் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. போதைப்பொருட்களை மட்டும் அகற்றிய பொலிசார், அதற்கு பதில் வேறொரு பொருளை வைத்து அடுப்புகளை அப்படியே வைத்துவிட்டனர்.
யாராவது கப்பலில் அனுப்பப்பட்ட பொருட்களை எடுக்க வருகிறார்களா என்று காத்திருக்க, யாரையும் காணவில்லை. மூன்று மாதங்கள் காத்திருந்தனர் பொலிசார்.
பின்னர் மெதுவாக lUke Humphries (30) என்ற ஒரு அவுஸ்திரேலியர் வந்தார். அவர் அடுப்புகளின் உள்ளிருப்பது போதைப்பொருள் அல்ல என்பது தெரியாமலே அவற்றை சேகரித்து வேறொரு சேமிப்பகத்துக்கு கொண்டு சென்றார்.
அப்போது மற்றொரு நபர் அந்த பொருட்களை பார்வையிடுவதற்காக வந்தார். அவர் கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த Laert Kasaj (33). காத்திருந்த பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.
அதே நேரத்தில் அந்த பொருட்கள் சைப்ரஸிலிருந்து அனுப்பப்பட்டிருந்ததால், சைப்ரஸ், பிரித்தானியாவில் சில இடங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவில் சில இடங்களில் இதே சம்பவம் தொடர்பாக ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியரின் வீட்டிலிருந்து 100,000 அவுஸ்திரேலிய டொலர்கள், மற்றும் மற்றொரு வீட்டிலிருந்து 200,000 டொலர்கள், மேலும் 3.5 கிலோகிராம் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இது ஒரு சர்வதேச போதை கடத்தல் கும்பலின் வேலை என்பதை உறுதியாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ள அவுஸ்திரேலிய பொலிசார், இவ்வளவு பெரிய அளவுள்ள போதைப்பொருள் விற்பனைக்கு செல்லும் முன் எங்கள் நாட்டில் பிடிபட்டுவிட்டதால் எங்கள் சமுதாயம் பாதுகாப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர்.