News

கோட்டாவின் பழிவாங்கலில் அடுத்த இலக்கு யார்? – ராஜிதவின் கைதைக் கண்டித்து சஜித் கேள்வி

 

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அரசியல் பழிவாங்கல் தொடர்கின்றது. இந்த நிகழ்ச்சி நிரலில் அடுத்த இலக்காக இருப்பவர் யார் என்று நாம் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் பொய் கூறினார் என்று குற்றம்சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சம்பிக்க ரணவக்கவுக்குப் பின்னர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்படுவார் என்று எமக்கு ஏற்கனவே தெரியும். இது ராஜிதவுக்கும் தெரிந்த விடயம். அதுதான் அவர் முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அதற்கிடையில் ராஜித கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபய அரசின் இந்தத் திட்டமிட்ட கைதுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் பகிரங்க வாதம் மற்றும் பகிரங்க விசாரணை நடத்த வக்கற்ற இந்த அரசு ராஜிதவைப் பழிவாங்கும் நோக்கில் கைதுசெய்துள்ளது.

சட்டமா அதிபருக்கு இந்த அரசு மறைமுகமாகக் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம்தான் ராஜிதவைக் கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. எனினும், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் நடுநிலையுடன் நீதியை வழங்கும். அந்த நல்ல தீர்ப்புக்காக நாம் காத்திருக்கின்றோம்” – என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top