ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டார்.
விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் நடந்த விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கவனயீனத்துடன் வாகனத்தைச் செலுத்தி நபர் ஒருவரைப் படுகாயமடையச் செய்தமை, விபத்தின் பின்னர் வேறொருவரை சாரதியாக அடையாளப்படுத்தி சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு வடக்குக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் நேற்றிரவு கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
கைதுசெய்யப்பட்ட சம்பிக்க, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தீவிர பரப்புரைகளை மேற்கொண்ட சஜித் ஆதரவு அணியினரில் சம்பிக்க ரணவக்க முக்கியமானவர். இந்தநிலையில், இந்தக் கைது நடவடிக்கை கோட்டாபய அரசின் பழிவாங்கல் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.