சிறார்கள் உள்ளிட்ட 7 பேருடன் மாயமான சுற்றுலா ஹெலிகொப்டர்: மீட்பு நடவடிக்கைகள் துரிதம்

ஹவாய் தீவுகளில் ஒன்றான கவாய் பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டரில் சென்ற இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் திடீரென்று மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவாய் தீவு சுற்றுவட்டாரங்களில் தற்போது தீவிர தேடல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் காலநிலை சாதகமாக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக சுமார் 4 மைல்கள் தொலைவு மட்டுமே பார்வைக்கு எட்டுவதாகவும், காற்றின் வேகம் மணிக்கு 30 மைல்கள் என இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
எங்களிடம் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் இருப்பதாகவும், ஹெலிகொப்டர் மற்றும் அதனுள்ளே இருக்கும் சுற்றுலா பயணிகள் தொடர்பில் எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும் என கடலோர காவல்படை கூட்டு மீட்பு மையத்தைச் சேர்ந்த ராபர்ட் காக்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா ஹெலிகொப்டரில் சென்றவர்கள் உள்ளூர் நேரப்படி 5.21 மணிக்கு புறப்பட்ட இடத்திற்கே திரும்ப தவறிய நிலையில், சுற்றுலா ஹெலிகொப்டர் மாயமானதாக சுமார் 6 மணிக்கு கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரை மாயமான ஹெலிகொப்டர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. கவாய் தீவின் 80 சதவிகித பகுதியானது மக்கள் நடமாட்டமற்ற பகுதியாகும். தீவின் பெரும்பகுதியில் தேசிய பூங்கா அமைந்துள்ளது.
மாயமானவர் எந்த நாட்டவர்கள் உள்ளிட்ட தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு கருதி, அவர்களின் புகைப்படங்களும் வெளியிட மறுத்துள்ளனர்.