சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 36 பேர் பலி… பலர் படுகாயம்

ஹோண்டுராஸ் சிறைச்சாலைகளில் இந்த வார இறுதியில் கைதிகளுக்கு இடையே நடந்த பயங்கரமான மோதலில் குறைந்தபட்சம் 36 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஹோண்டுராஸ் நாட்டில் போதைப் பொருள் கடத்தல், வறுமை மற்றும் ஊழல்கள் அதிகரித்து வருவதால், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாவதும் அதிகரித்து வருகிறது.
இதனால் அந்நாட்டில் உள்ள 27 சிறைகள், 21,000 கைதிகளால் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், தலைநகர் டெகுசிகல்பாவிற்கு வடக்கே 60 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள எல் போர்வெனீர் சிறையில், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 10 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் அவர்கள் “துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் துணிகளை” பயன்படுத்தியதாக, தேசிய இடை-நிறுவன பாதுகாப்பு படையின் (புசினா) செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜோஸ் கொயெல்லோ உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதேபோல வெள்ளிக்கிழமை இரவு, தலைநகரின் வடமேற்கே உள்ள துறைமுக நகரமான தேலாவில் உள்ள சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 கைதிகள் இறந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.
டெகுசிகல்பாவிற்கு கிழக்கே லா டோல்வாவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக கைதி ஒருவரால், எம்.எஸ் -13 கும்பலின் ஐந்து உறுப்பினர்கள் டிசம்பர் 14 அன்று கொலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து நாட்டின் 27 சிறைச்சாலைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவருமாறு இராணுவத்திற்கும் காவல்துறையினருக்கும் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ் உத்தரவிட்ட பின்னரே இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.