ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்த விவகாரம் – தமிழ் அரசியல் கைதி விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டார். இருதரப்பு சாட்சியங்கள், சான்றுகளை ஆராய்ந்த பின்னர் குறித்த சந்தேகநபருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி வழக்கில் இருந்து அவரை நீதிபதி விடுவித்தார்.
2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் கோட்டாபய ராஜபக்ஷவின் வாகன அணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக, ஐந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், நான்காவது எதிரியாக குற்றம்சாட்டப்பட்ட சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரையே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெற்றியாராச்சி நேற்று விடுதலை செய்தார்.