ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்திருப்பதன் ஊடாக அவர் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 19வது திருத்தத்தை இரத்து செய்து, 18வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்குப் பின்னால் நாட்டில் மீண்டுமொரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் யோசனையே இருக்கின்றது
இந்நிலையில், அந்த முயற்சியை பொதுத் தேர்தலில் மக்கள் தவிடுபொடியாக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததன் ஊடாக மக்களின் விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்கும் உரிமையை அரசாங்கம் பறித்துள்ளது.
எதிர்வரும் 03ம் திகதி நாடாளுமன்றத்தை அழைத்து சிறிது நேரத்தில் சபையை மீண்டும் ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது. இது ஜனநாயக விரோத செயல். நாடாளுமன்றம் கூடுதலும் கருத்து தெரிவிப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் உரிமை.
ஆகையால் தற்போது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாதிருப்பதால் அந்த உரிமையை பறிக்கப்பார்க்கிறது. 2015ம் ஆண்டிலும் அப்படியான சம்பவம் ஏற்பட்டது. ஒக்டோபர் 26ம் திகதி நீதிமன்ற செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாமலேயே பிரதமர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பிற்கு முரணானது என்று சுட்டிக்காட்டுகின்றோம்.
இப்போது நாடாளுமன்றம் 03ம் திகதி கூடும்போது பொருளாதார திட்ட உரை சாதாரண சம்பிரதாயமாக நிகழ்த்தப்பட்டு தேசிய உரை நிகழ்த்தப்படும். பின்னர் விவாதம் நடத்தப்படும். அதனையடுத்து நாடாளுமன்றம் அதனை ஏற்றுமா இல்லையா என்கிற வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
இவற்றை செய்யாமல் மார்ச் 02ம் திகதிவரை ஒத்திவைப்பதற்கான சூழ்ச்சி இடம்பெறுகின்றது. இது அநீதியானதும். அரசியலமைப்புக்கு முரணான விடயமுமாகும். நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மறைத்து இந்தப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்” என அவர் கூறியுள்ளார்.