பிளாஸ்டிக் பையில் ஆணின் சடலம்: சுவிஸ் மக்களை மிரள வைத்த சம்பவம்

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் வனப்பகுதி அருகே பிளாஸ்டிக் பையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை மிரள வைத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மண்டல பொலிசாரின் செய்தி தொடர்பாளர் மார்கஸ் ரூட்ஸ் உறுதி செய்துள்ளார். வழிபோக்கர் ஒருவரே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பிளாஸ்டிக் பை ஒன்றை கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சுமார் 3 மணியளவில் பிளாஸ்டிக் பையை காண நேர்ந்த அவர், உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், குறித்த பையை திறந்து பார்த்தபோதே, அதனுள் ஆணின் சடலம் ஒன்று திணிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
குற்றவியல் சார்ந்த திரைப்படங்களிலேயே இதுபோன்ற காட்சிகளை தாம் பார்த்துள்ளதாக, சம்பவப் பகுதிக்கும் சில மீற்றர்கள் தொலைவில் குடியிருக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று அவர் தமது குடியிருப்பில் இருந்து வெளியே சென்றிருந்ததாகவும், மாலை வேளையில் திரும்பி வந்தபோது ஏராளமான பொலிசாரை காண நேர்ந்ததாகவும், ஏதேனும் சாலை விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றே முதலில் எண்ணியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.