முன்னாள் ஜனாதிபதியின் இரு முக்கிய அதிகாரிகளுக்கு 20, 12 ஆண்டுகள் கடூழியச் சிறை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் ஆளணி பிரதானியான கலாநிதி குசும்தாஸ மகாநாமவுக்கு 20 வருடமும் அரச மரக்கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்கவுக்கு 12 வருடங்களும் கடூழிய சிறைத்தண்டனை விதித்து ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 20 மில்லியன் ரூபாவை தண்டப் பணமாக செலுத்துவதற்கும் முதலாவது குற்றவாளியான குசும்தாஸ மகாநாமவுக்கு 65 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் இரண்டாவது குற்றவாளியான பியதாச திஸாநாயக்கவுக்கு 55 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை செலுத்த தவறின் 6 மாத கால சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியப் பிரஜையான முதலீட்டாளர் ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை உட்பட பாரிய பல குற்றங்களின் குற்றவாளியாக காணப்பட்டதை தொடர்ந்தே இத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
மூவரடங்கிய மேற்படி நீதிபதிகள் குழாமில் உயர் நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
முதலாவது குற்றவாளிக்கு 13 பாரிய குற்றச்சாட்டுகளும் இரண்டாவது குற்றவாளியான பியதாச திஸாநாயக்கவுக்கு எதிராக 11 பாரிய குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் குற்றவாளிகளெனவும் தண்டனைகளை சமகாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் இவ் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கிணங்க குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வெவ்வேறாக தண்டனை வழங்கி சமூகத்திற்கு முன்மாதிரியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் அரச அதிகாரியொருவரால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகமான இலஞ்சமென அதனைக் குறிப்பிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார இலங்கைக்கு முதலீட்டுக்காக வரும் வெளிநாட்டு பிரஜையொருவரிடமிருந்து இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியே ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.