News

மெக்சிகோவில் கோர விபத்து ; லாரி மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 14 பேர் பலி

மெக்சிகோவில் லாரி மீது வேன் மோதி தீப்பிடித்ததில் சுற்றுலாவுக்காக சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் தலைநகர் குவாடலஜராவில் உள்ள சான்பில்பே நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாதலமான புவேர்ட்டோ வல்லார்டா கடற்கரை நகரத்துக்கு செல்ல வேனில் புறப்பட்டு சென்றனர். வேனில் 5 சிறுவர்கள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 26 பேர் இருந்தனர்.
இந்த வேன் ஜாபோட்லேன்ஜோ நகருக்கு அருகே குவாடலஜரா-லாகோஸ் டி மோரேனோ தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய வேன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருவதற்குள் வேன் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த கோர விபத்தில் 5 சிறுவர்கள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டர் மூலம் குவாடலஜராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற 10 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் 12 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
விடுமுறையை கொண்டாட சுற்றுலாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top