இந் நிலையில் இன்று முற்பகல் வேளையில் குறித்த வைத்தியசாலைக்கு சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க தலைமையில் சென்ற விஷேட குழு, அங்கு வைத்தியர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர், பிற்பகல் 2.00 மணியளவில் அவரை கைது செய்தனர்.

சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில்  வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய விவகாரத்தில்  இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த கைதின் பின்னரோ அல்லது முன்னரோ முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற சி.ஐ.டி.யினரால் முடியாமல் போயுள்ளது.

அவரது உடல் நிலைமை கருத்தில் கொண்டு, வைத்திய அறிவுறுத்தல்களுக்கு அமைய இவ்வாறு வக்கு மூலம் பெறாமல் அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையை மட்டும் முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டிய சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி,  அதன் பின்னர்  அவரை நீதிவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

அதன்படி,  ராஜித்த சேனாரத்ன சிகிச்சைப் பெறும்,  தனியார் வைத்தியசாலை கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள நிலையில், அந்த பகுதிக்கு பொறுப்பான கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா இன்று மாலை 4.25 மணியளவில்  அவ் வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரான ராஜித்தவை பார்வையிட்டார்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் சலனி பெரேரா உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து குறித்த தனியார் வைத்தியசாலையிலேயே ராஜித்த சேனாரத்னவுக்கு  சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இன்று மாலை முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.