அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
பாக்தாத்தில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தை ஈரான் ஆதரவு போராளிகள் கடந்த புதன்கிழமை முற்றுகையிட்டு சூறையாடியதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தி உள்ளது. அதுவும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது ஈரான்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் என ஐ.நா. சபைக்கான ஈரான் தூதர் மஜித் டாக்த் ரவான்சி கருத்து தெரிவித்தார்.
இந்த தாக்குதல் உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி, ஈரானின் உயர்ந்த அதிகாரம் படைத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்கப்பட்டவர். அவர் கொல்லப்பட்டிருப்பது ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களது படைத்தலைவரின் உயிர்ப்பலிக்காக அமெரிக்கா மீது பழிதீர்க்கப்படும் என்று ஈரான் கூறி உள்ளது.
ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி மற்றும் அவருடன் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலம் பாக்தாத்தில் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் கருப்பு நிற உடை அணிந்து, ஈராக் கொடி ஏந்திச்சென்றனர்.

ஈராக் நாட்டின் இடைக்கால பிரதமர் அதெல் அப்தெல் மஹதி, முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிகி உள்ளிட்ட பலம் வாய்ந்த ஷியா முஸ்லிம் தலைவர்கள், ஷியா மத குரு அம்மர் அல் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இறுதி ஊர்வலம் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள ஹரியா சதுக்கத்தில் முடிந்தது. அங்கு காசிம் சுலைமானி உள்ளிட்டவர்கள் உடல்கள் வைக்கப்பட்டு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
சுலைமானி தவிர்த்து மற்றவர்களின் உடல்கள் ஷியா பிரிவு புனித நகரமான நஜாப் எடுத்து செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டன.

சுலைமானி உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரான் கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது, அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கார் அணிவகுப்பில் திடீரென ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசப்பட்டன. இதில் ஏராளமான கார்கள் தீப்பிடித்தன.