ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு!

அவுஸ்திரேலியாவை சூழ்ந்துள்ள காட்டுத் தீக்கு உயிர்த்தியாகம் செய்துள்ள தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை அவரது ஒன்றரை வயது மகன் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவு வேகமாக பரவி வருகிறது.
நியூ சவூத்வேல்ஸ் பகுதியில் தொடங்கிய காட்டுத் தீ தற்போது மெல்போர்ன் நகர் வரை பரவி உள்ளது. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை 1200 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 17 பேர் மாயமாகி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 19 அன்று தென்மேற்கு சிட்னியில் பக்ஸ்டன் அருகே உள்ள கிரீன் வாட்டல் க்ரீக்கில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது 32 வயதான ஜெஃப்ரி கீடன் கொல்லப்பட்டார்.
கீடனின் உயிர்த் தியாகத்தை கவுரவப்படுத்தும் வகையில் அவரது இறுதி சடங்கில், கீடனின் ஒன்றரை வயது மகன் ஹார்வே கீடனுக்கு உயரிய கவுரவப் பதக்கம் அணிவித்து அவுஸ்திரேலிய தீயணைப்புத் துறை பெருமைப்படுத்தியுள்ளது.
சிட்னியின் நடைபெற்ற கீடனின் இறுதி சடங்கில் பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.