News

உக்ரைன் விமான விபத்து: 176 பேர் பலி

ஈரானில் உக்ரைன் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 176 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் புறப்பட்டு சென்றது. உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் 167 பயணிகளும், 9 விமான ஊழியர்களும் இருந்தனர்.
புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் உக்ரைன் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. விமான நிலையத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் லாஜ் அபத் என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
விமானம் தரையில் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
விமானத்தில் இருந்த 176 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களில் 81 பெண்கள் மற்றும் 15 சிறுவர்களும் அடங்குவர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்களும் எழுந்துள்ளன.
ஏனெனில் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் இந்த விபத்து நடந்து உள்ளது. இதனால் உக்ரைன் விமானம் நாசவேலை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
எனினும் விமான விபத்து தொடர்பாக எந்தவித யூகங்களையும் தெரிவிக்கவேண்டாம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் விமான விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் வரை தேவையற்ற யூகங்களை தெரிவிப்பதில் இருந்து விலகியிருக்க வேண்டுமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், அந்த விமானத்தில் ஈரானியர்கள் 82 பேர், கனடாவை சேர்ந்த 63 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனைச் சேர்ந்த 11 பேர் மற்றும் சுவீடனை சேர்ந்த 10 பேருடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தலா 3 பேரும் விபத்தில் பலியானதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழு தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஈரான் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top