News

உலகில் விமானப்படை வைத்திருந்த புலிகள்: விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து மஹிந்த வெளிப்படுத்திய தகவல்

விடுதலைப் புலிகளின் தலைவரே உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலை தாக்குதலை நடத்தும் படகு என்பவற்றை அறிமுகப்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விமானப் படை அதிகாரிகள் இலங்கை விமான சேவையில் இணைவதற்கான பாடநெறி மற்றும் பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களுக்கு இன்றைய தினம் உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு திருகோணமலை சீனத்துறைமுகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“வன்னி இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் பல கிலோ மீற்றர்களுக்கு மண் திட்டுக்களை அமைத்து இராணுவத்தின் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்.

இதன்போது விமானப்படை அந்த மண்திட்டுக்களை பாராமல் புலிகள் மீது தாக்குதல் நடத்தி இராணுவத்தின் பயணத்திற்கு ஒத்துழைப்பு செய்தது. அந்த பயணமானது வேகமடைய விமானப்படையின் தாக்குதலே காரணம்.

அதுமாத்திரமல்ல, வீடியோ கமராக்கள் பொருத்தப்பட்ட யூ.ஏ.வி தொழில்நுட்பத்துடனான விமானி அற்ற விமானம் பயன்படுத்தப்பட்டு விடுதலைப் புலிகளின் மையங்களைத் தேடியறிய விமானப்படையினர் உதவிசெய்தனர்.

உலகில் விமானப்படைகளிடையே தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி அதிகமான அனுபவங்களைப் பெற்ற படையாக இலங்கை விமானப்படையே சாரும் என நினைக்கின்றேன்.

உலகில் எந்தவொரு தீவிரவாத அமைப்பிற்கும் விமானப்படை தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஈராக், சிரியாவில் அதிகமான நிலத்தை கையகப்படுத்தி நிலைக்கொண்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் விமானப்படைத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திறன் இருக்கவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் விமானப்படைத் தாக்குதல்களை நடத்துவதற்கான திறன் இருந்தது. விடுதலைப் புலிகளின் விமானப் படைத் தாக்குதல்களினால் உலகத்திலுள்ள தீவிரவாத அமைப்புக்களுக்குப் புதுவித அனுபவம் கிடைத்தது.

இரவு நேரங்களில் மாத்திரம் இரைச்சலின்றி அமைதியாக கீழ் மட்டத்தில் இலகுவாகப் பயணிக்கக்கூடிய சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.

அந்தக் காலங்களில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குரும்பட்டித் தாக்குதல்கள் எனக் குறிப்பிடுவதுண்டு. அந்த குரும்பட்டித் தாக்குதல்களை புலிகள் இரவு வேளைகளில் கரையோரமாக தாழப்பறந்து வந்து மேற்கொண்டனர்.

அந்தக் குரும்பட்டித் தாக்குதல் மூலம் கொலன்னாவ பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் போன்றவற்றில் பெரும் சேதங்களை ஏற்படுத்த முனைந்தனர்.   அதிர்ஷ்டவசமாக அந்த தாக்குதல்கள் வெற்றியளிக்கவில்லை. அந்த தாக்குதல்கள் சிலவேளை வெற்றியளித்திருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகள் இவ்வாறு தாக்குதல்களை ஆரம்பித்தபோது, முழு உலகமும் உற்றுநோக்கிப்பார்த்தது. விடுதலைப் புலிகளின் சிறிய விமானங்களின் இயந்திர உஷ்ணம் உட்பட எமது படைகளின் ஏவுகணைகளுக்கு அகப்படாத வகையில் கீழ்நோக்கியே பொருத்தப்பட்டிருந்ததாகவே கூறப்படுகின்றது.

இதுபோன்ற தொழில்நுட்பங்களை சர்வதேசம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை.  தற்கொலைப் படை அங்கி, தற்கொலை தாக்குதல்களை நடத்தும் சிறிய படகு என்பவற்று உலகில் தீவிரவாத அமைப்புகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரே அறிமுகம் செய்திருந்தார்.

சிறிய விமானங்களைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் கண்காணிப்பு செய்யும் முறையும் அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்திய மற்றுமொன்றாகும். அதனால்தான் உலகில் இருக்கும் பயங்கரமாக தீவிரவாத அமைப்பாக 2008ம் ஆண்டில் விடுதலைப் புலிகளை அமெரிக்காவின் எவ்.பி.ஐ அமைப்பு உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தியது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் சவால்களை எதிர்கொண்ட எமது விமானப் படையினருக்கு வேறெந்த படையினருக்கும் இல்லாத விசேட அனுபவங்கள் இருக்கின்றன. இன்று சர்வதேசத்தில் இராஜியங்களுக்கு இடையிலான மோதல் குறைவாகவே உள்ளது. தீவிரவாதமே உலகமெங்கிலும் இருக்கின்ற போர் மூலமாக தீர்வுகாணும் பிரச்சினையாக காணப்படுகின்றது.

அந்த பிரிவில் எமது முப்படையினரும் அனுபவம் பெற்றுள்ளனர். 04 தசாப்தங்களாக இருந்த போர்கச் சூழலில் எமது படையினர் 1980களில் இணைந்தனர். தீவிரவாதிகள் நிலைகொண்டிருக்கும் பகுதிகளைக் கட்டுப்படுத்தல் ஆரம்பித்தபோது இறுதிப்போர் வரை இலங்கை விமானப்படை மிகச்சிறப்பான பணியை ஆற்றியது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும், அதன் புறப் பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட இராணுவ முகாம்களில் விடுதலைப் புலிகள் முழுவீச்சுடன் தாக்குதல் நடத்தியபோது விமானப்படையினர் உயிரைப் பணயம் வைத்து முகாமிற்குள் நுழைந்து ஹெலிகொப்டர்களை தரையிறக்கி காயமடைந்தவர்களைக் காப்பாற்றினார்கள்.

ஆயுத விநியோகம் மற்றும் வான் மூலமாக புலிகள் மீது தாக்குதல் நடத்தல் என்பன விமானப்படையினால் இராணுவத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பை எம்மால் நினைவுகூறமுடிகிறது. போர் வீரர்கள் என்கிற தளத்திற்கு அவர்கள் இணைந்துவிட்டார்கள். முப்படையினர் தொழிற்படுவது யுத்தம் இருக்கின்ற காலத்தில் மட்டுமல்ல. சமாதானம் ஏற்படும் காலத்திலும் படையினருக்கு மிகப்பெரிய பணியிருக்கிறது.

வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் விமானப்படையினால் மேற்கொள்ளும் மனிதாபிமான பணிகள் உள்ளன. அவற்றை விமானப்படையினரால் மட்டுமே செய்யமுடியும். கரையோரப் பாதுகாப்பு மற்றும் எமது நாட்டிற்குள் அத்துமீறும் வெளிநாட்டுப் படகுகள் குறித்து கண்காணிப்பு செயற்பாட்டிலும் விமானப்படை தொடர்ந்தும் ஈடுபடுகின்றது.

வனப்பகுதிகளை அழித்தல், சுத்தப்படுத்தி பலவித செய்கைகளில் ஈடுபடும் பிரிவினர் குறித்து ஆராய்ந்து பொலிஸாருக்கும், படையினருக்கும் அறிவுறுத்தல் வழங்குவதையும் விமானப்படை மேற்கொள்கிறது” என கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top