சடலங்களை இன்னும் மீட்க முடியவில்லை! ஈரானில் பரிதவிக்கும் கனேடிய புதுமண தம்பதியின் குடும்பம்

கனடாவின் Montreal பகுதியை சேர்ந்த ஈரானிய புதுமண தம்பதிகளின் சடலத்தை அங்குள்ள அதிகாரிகளால் இன்னமும் மீட்க முடியவில்லை என்ற தகவல் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
Montreal பகுதியில் குடியிருந்துவந்த தம்பதி சாரா மாமானி மற்றும் சியாவஷ் கஃபுரி-அசார். புதுமண தம்பதிகளான இருவரும் ஈரானில் குடும்ப திருமண விழாவுக்காக சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தில் இவர்களும் சிக்கிக் கொண்டனர். இருவரும் பொறியியலில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமின்றி, நல்ல ஊதியத்தில் பணியிலும் இருந்து வந்தனர்.
சமீபத்திலேயே இருவரும் இணைந்து Montreal பகுதியில் குடியிருப்பு ஒன்றை விலைக்கு வாங்கியிருந்தனர். ஈரானில் இருந்து திரும்பிய உடன் புதுமனை புகுவிழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்ததாக அவர்களது நண்பர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், கஃபுரியின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், விபத்து நடந்த பகுதியில் சடலங்களை தேடுவதாகவும், ஆனால் குறித்த அடையாளங்களுடன் எந்த சடலமும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தங்களுக்கு தாங்க முடியாத ஒன்று எனவும், அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.