நடுவானில் பழுதடைந்த விமானம்… குழந்தைகள், நீதிபதிகள் உட்பட 18 பேர் பலி

சூடானில் பழங்குடியினர் வன்முறை வெடிப்பிற்கு மத்தியில் இராணுவ விமானம் வெடித்து சிதறிய விபத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.
சூடானின் மேற்கு டார்பூர் மாகாணத்தில் டார்பூர் அரபு மற்றும் ஆப்பிரிக்க மசாலிட் பழங்குடியினரிடையே, கடந்த சில தினங்களாகவே வன்முறை நடந்து வருகிறது.
இதன் விளைவாக நடந்த சண்டையில் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். மசாலிட் பழங்குடித் தலைவர்கள் மோதல்களில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து சோதனை செய்வதற்காக அன்டோனோவ் 12 என்கிற இராணுவ விமானம் வியாழக்கிழமை இரவு, மேற்கு டார்பூரில் உள்ள எல் ஜெனீனா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
அதில், மூன்று நீதிபதிகள், அதிகாரிகள், குழந்தைகள் என 18 பேர் சென்றுள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட இராணுவ விமானத்தில் பயணித்த 18 பேரும் உயிரிழந்துவிட்டதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் அமர் முகமது அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.