நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசியலமைப்பு அவசியம் – சம்பந்தன்

நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டும் என்றால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரு புதிய தசாப்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இரா. சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமன்றத்தின் மூலம் நாட்டில் ஒரு செயல்முறை இடம்பெற்று வருகிறது.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுத் தேர்தல்களில் நாட்டு மக்களால் பலமுறை தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது, அவர்கள் தங்கள் தீர்ப்புகளின் மூலம் 1978 அரசியலமைப்பை நிராகரிக்கவும் புதிய அரசியலமைப்பை அமுல்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அடுத்தடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியதே நாடாளுமன்றம் தன்னை ஒரு அரசியலமைப்புச் சட்டமன்றமாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
நாட்டின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கும் பார்வையில் ஒரு புதிய அரசியலமைப்பு முக்கியமானதொன்றாகும். அது சட்டமன்ற அதிகாரங்களாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரமாக இருந்தாலும் அல்லது அதிகாரப் பகிர்வாக இருந்தாலும் சரி புதிய அரசியலமைப்பு முக்கியமானது.
இந்த செயல்முறை தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டு துரதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதித் தேர்தலால் இந்த செயல்முறை கவனிக்கப்படவில்லை. எங்கள் நோக்கம், அந்த செயல்முறையை தொடர்ந்தும் மேற்கொண்டு அதனை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதாகும்.
இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல்கள் மிக விரைவாக நடைபெற வாய்ப்புள்ளது. குறிப்பாக பெப்ரவரி பிற்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம், பின்னர் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் இவை அனைத்தும் நாட்டின் எதிர்காலம் மற்றும் நாட்டின் அனைத்து மக்களையும் பற்றிய ஒரு பிரச்சினை, இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது இந்த விடயங்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
அரசாங்கத்திடமிருந்து வெளிவந்த சில அறிவிப்புக்கள் குறித்து நாங்கள் ஏமாற்றமடைய காரணம் உள்ளது. ஆனால் எந்தவொரு விடயத்திலும் நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. இதனால் முழு நாட்டின் முன்னேற்றத்திலோ அல்லது முழு நாட்டின் வளர்ச்சியிலோ நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று அர்த்தமல்ல.
ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் தேசிய பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்ற காரணத்தினால் நாடு இன்று பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் குழப்பத்தில் உள்ளது.
நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பிற்கு தேசிய பிரச்சினைக்கான தீர்வு அதாவது தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வே அடிப்படை என நாங்கள் கருதுகிறோம்” என கூறினார்