பதற்றத்தில் அமெரிக்க நகரங்கள்: 3000 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பும் பென்டகன்!

வான்வழி தாக்குதலில் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக சுமார் 3,000 கூடுதல் துருப்புக்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று அதிகாலை ஈராக் தலைநகரில் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம், ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலானது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரிலே நடத்தப்பட்டதாக, வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டதை அடுத்து, இருநாடுகளுக்கு மத்தியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
வான்வழித் தாக்குதலை ஒரு ‘படுகொலை’ என்று ஈரான் முத்திரை குத்தியதோடு, பதிலடி கொடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியது. இதனால் அமெரிக்க நகரங்களில் பயங்கரவாத எச்சரிக்கை அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் 3,000 துருப்புக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.