மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்குள் உள்ள பதவிகள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும் என, இரு குழுக்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டபோதும், அவர்கள் அதனை செய்யத் தவறிவிட்டனர் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன்ற சபைத் தலைவர் பதவி பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆளும் தரப்பு பிரதம கொறடா பதவி சுதந்திர கட்சி உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த உடன்படிக்கையில் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக தாம் பொறுமை காத்திருப்பதாகவும் சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இரு கட்சிகளுக்கு இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒருபோதும் மீறப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.
அந்தவகையில் இவ்விடயம் தொடர்பாக எமது ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், “தற்போது, ஒரு இடைக்கால அரசாங்கம் மட்டுமே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது சரியான அரசு அல்ல. நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினராக இருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
தற்போதைய சூழ்நிலையைப் பற்றி அதிருப்தி அடைந்தவர்கள்தான் இதுபோன்ற விடயங்களைப் பற்றி குற்றம் சாட்டுகின்றனர். கட்சித் தலைவர்கள் இதில் எந்த தவறும் காணவில்லை, அவர்கள் தற்போதைய சூழ்நிலையை நன்கு அறிந்து செயற்படுகின்றனர், தேர்தலுக்குப் பின்னர் இந்த நிலைமைகள் அனைத்தும் சரி செய்யப்படும்” என கூறினார்.