மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டால் அது ‘முழு உலகிற்கும் பேரழிவு’: விளாடிமிர் புடின் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் ‘முழு உலகிற்கும் ஒரு பேரழிவாக’ இருக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
கடந்த ஜனவரி 3ம் திகதியன்று அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல் மூலம் ஈரான் இராணுவ உயர் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து, இருநாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள், லிபியாவின் நிலைமை மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 கட்டுமானம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்செலா மெர்கல், 2015ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக ரஷ்யாவிற்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புடின், ‘பெரிய அளவிலான இராணுவ மோதல்கள்’ என்பது பிராந்தியத்திற்கும், மத்திய கிழக்கிற்கும் மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஒரு பேரழிவாக இருக்கும்.
இது ஐரோப்பாவிற்கும் பிற பிராந்தியங்களுக்கும் புதிய புலம்பெயர்ந்தோராக செல்ல வழிவகுக்கும் என எச்சரித்தார். மேலும், இது ‘உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்’ என்றும் அவர் கூறினார்.